Home மாவட்டங்கள் பெங்களூர் விவசாயியைத் தாக்கிய புலி, 5 குட்டிகளுடன் கூண்டில் அடைப்பு

விவசாயியைத் தாக்கிய புலி, 5 குட்டிகளுடன் கூண்டில் அடைப்பு

மைசூர்: ஜூலை 6-
மைசூர் அருகே விவசாயி மற்றும் வனத்துறை ஊழியரைத் தாக்கிப் பீதியை ஏற்படுத்திய தாய் புலி, அதன் 5 குட்டிகளுடன் வனத்துறையினரால் அதிரடியாகப் பிடிக்கப்பட்டது.
சரகுரு தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கிரண் என்ற விவசாயி, சில நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது புலி ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து குதறியது. இதேபோல், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் குமார் என்பவரையும் அந்தப் புலி தாக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் புலியின் நடமாட்டம் எதுவும் தெரியவில்லை.
இந்த நிலையில், கடந்த ஜூலை 4-ஆம் தேதி மாலை 7 மணியளவில், சுமார் 12 வயது மதிக்கத்தக்க அந்தத் தாய் புலி, 25 நாட்களேயான தனது 5 குட்டிகளுடன் அங்கு பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவிலும் நீடித்த இந்த ஆபரேஷனில், நேற்று அதிகாலை 3 மணியளவில் தாய் புலி மற்றும் அதன் 3 ஆண் குட்டிகள், 2 பெண் குட்டிகள் என மொத்தம் 6 புலிகளும் பத்திரமாக மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டன.
பிடிபட்ட தாய் புலியும் அதன் குட்டிகளும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பெங்களூருவில் உள்ள பன்னெர்கட்டா உயிரியல் பூங்காவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புலி குடும்பத்தோடு பிடிபட்டதைத் தொடர்ந்து முள்ளூர் கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.