Home தலைப்பு செய்தி எஸ்ஐஆர் முறைகேடு புகார்

எஸ்ஐஆர் முறைகேடு புகார்

பெங்களூரு: ஜூலை 6-
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் விதிகளை மீறி முறைகேடுகள் நடப்பதாகவும், எனவே தற்போதைய எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. – ஜே.டி.எஸ். கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அதிரடி புகார் அளித்துள்ளன.
மாநிலத்தில் எஸ் ஐ ஆர் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதற்கு உடனடியாக தடை விதித்து, விதிகளின்படி இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரை தற்போதைய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன
மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, எச்.டி.குமாரசாமி, மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்.அசோக், சலவாதி நாராயணசாமி, பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவி, ஜே.டி.எஸ். தலைவர் போஜேகவுடா உள்ளிட்ட இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அடங்கிய குழுவினர் இன்று பெங்களூருவில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து, முறைகேடுகள் குறித்த ஆதாரங்களுடன் புகார் மனுவை அளித்தனர்.
பெங்களூரு கே.ஆர்.வட்டத்தில் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணி அளவில் திரண்டு வந்த கூட்டணி தலைவர்கள், தேர்தல் அதிகாரியை ஒன்றாகச் சந்தித்து இந்த எழுத்துப்பூர்வமான புகாரை கொடுத்தனர். விதிமுறைகளின்படி, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று படிவங்களை விநியோகிக்க வேண்டும். ஆனால், அதிகாரிகளை திருமண மண்டபங்கள், சத்திரங்கள், மசூதிகள், தர்காக்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களில் அமர வைத்து, அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து இந்த பணிகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு செய்வது சட்டவிரோதமானது. எனவே, இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. – ஜே.டி.எஸ். குழுவினர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர்.
மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பி.எல்.ஓ.க்களுக்கு அழுத்தம் கொடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இதுவரை நடந்துள்ள பணிகளை ரத்து செய்துவிட்டு, புதிய செயல்முறையைத் தொடங்க வேண்டும் என்று கூட்டணித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்யாண மண்டபங்கள் மற்றும் சத்திரங்களில் இந்த பணிகள் சட்டவிரோதமாக நடத்தப்படுவது குறித்த வீடியோ ஆதாரங்களையும் . குழுவினர் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
எஸ் ஐ ஆர் அமைப்பை சீர்குலைக்க காங்கிரஸ் முயல்கிறது. பி.எல்.ஓ.க்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். சில இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களே பி.எல்.ஓ.க்களிடம் இருந்து படிவங்களை வாங்கிச் சென்று விநியோகம் செய்கிறார்கள். இதையெல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.