
வாஷிங்டன், ஜூலை 7- அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை ஜூலை 4-ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடியது. உலகின் பெரும்பகுதி நாடுகளால் ஏற்கப்பட்ட கரன்சியாக அமெரிக்க டாலர் மாறியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு கிடைத்திருக்கும், இந்த அங்கீகாரம், அந்நாட்டின் அரசியல் பரிணாம வளர்ச்சியை மட்டுமல்லாமல் அசாதாரண பொருளாதார ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது. அமெரிக்க டாலர் என்பது அந்நாட்டின் தேசிய நாணயம் என்பதை விட வேறு பல முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளால், இருப்பு வைக்கப்படும் கரன்சியாக டாலர் மாறிவிட்டது. ஒரு நாட்டுக்கும், மற்றொரு நாட்டுக்கும் இடையே எல்லை கடந்த வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடத்தப்படுகிறது, உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்துக்கும் டாலர் ஆதாரமாக இருக்கிறது. அமெரிக்காவில் காலணி ஆதிக்கம் முடிந்து சுதந்திரம் அடைந்தபின் 1792-ம் ஆண்டு நாணயச் சட்டம் இயற்றப்பட்டு, அமெரிக்க டாலர் அதிகாரபூர்வ கரன்சியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் இயற்றப்பட்டு சில பத்தாண்டுகள் வரை அமெரிக்க டாலர் என்பது அதன் எல்லைக்கு அப்பால் செல்லாமல், செல்வாக்கு பெறாமல்தான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இப்போது டாலர் இருப்பதைப் போல உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்சியாக பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் இருந்தது. இது பிரிட்டனின் ஏகாதிபத்தியத்தையும், வர்த்தகத்தின் சக்தியையும் வெளிப்படுத்தியது. திருப்புமுனை மாற்றம்மு தலாம் உலகப் போரின்போது 1914 மற்றும் 1918-ம் ஆண்டுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகள் உணவு, தொழிற் துறை பொருட்கள், ராணுவத் தளவாடங்கள், மூலப்பொருட்களை அமெரிக்காவிடம் வாங்கத் தொடங்கின. இதுதான் அமெரிக்கா வளர்வதற்கு முதல் காரணமாக அமைந்தது.பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் அதிகமாக கொள்முதல் செய்ததால் மெதுவாக ஐரோப்பாவின் தங்கம் கையிருப்பு குறைந்தது. உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் லேவாதேவியாக இருந்த பிரிட்டனின் ஆதிக்கம் பலவீனமடைந்தது. உலகளாவிய நிதி மையத்தின் சமநிலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக அட்லாண்டிக் வரை பரவியது. பிரிட்டன் தொடர்ந்து உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் தேசமாக இருந்தாலும், முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்து, உலக நாடுகளுக்கு தேவையான அளவு கடன் கொடுக்கும் நாடாக வளர்ந்தது. இந்த மாற்றம் 2-ம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய நிதி கட்டமைப்பின் மறுசீரமைப்புக்கு அடித்தளமிட்டது. அமெரிக்காவின் நியூ ஹெமிஸ்பயர் மாகாணத்தில் உள்ள பிரெட்டன் உட்ஸ் நகரில் உள்ள மவுன்ட் வாஷிங்டன் ஹோட்டலில் 1944-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்த பிரெட்டன் உட்ஸ் (Bretton Woods Conference) மாநாடு நடந்தது. இதற்கு அமெரிக்க நிதி மற்றும் பணவியல் மாநாடு என்ற பெயரும் உண்டு. இந்த மாநாட்டில் 44 சார்பு நாடுகளும், அதன் 700 பிரிதிநிதிகளும் பங்கேற்றனர். 2-ம் உலகப் போர் முடிந்திருந்த நிலையில், சர்வதேச நிதிச் சூழலை வலுவாகக் கட்டமைக்கவும், புதிய நிதிக் கட்டமைப்பை உருவாக்கவும் இந்த மாநாடு நடந்தது.




















