
சியாட்டில், ஜூலை 7- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணி, போஸ்னியா & ஹெர்சகோவினா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறி இருந்தது. போஸ்னியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் வீரர் தாரிக் முஹாரெமோவிச்சை ஃபவுல் செய்ததற்காக அமெரிக்காவின் ஃபொலாரின் பாலோகனுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டிருந்தது. இதனால் விதிமுறைப்படி அவர், இன்று சியாட்டில் நகரில் நடைபெறும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாட முடியாது. இந்நிலையில் பொலாரின் பாலோகன் தடையை நீக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டி னோவிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினார். இதையடுத்து பிஃபா தனது ஒழுங்குமுறை விதிகளின்படி பலோகனின் தடையை நிறுத்தி வைத்து, அவர் பெல்ஜியத்துக்கு எதிராக விளையாட அனுமதி வழங்கியுள்ளது. பிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொலாரின் பாலோகன் மீதான தடையை அமல்படுத்துவது ஒரு வருட நன்னடத்தைக் காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நன்னடத்தைக் காலத்தில் பொலாரின் பாலோகன் இதே போன்று விதிமீறலைச் செய்தால், இந்த தடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக தடை அமல்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் ரெட்-கார்டு வழங்கப்பட்ட பிறகும் ஒரு வீரருக்கு தடை வழங்கப்படாத நிகழ்வு 1962-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். பிஃபாவின் இந்த முடிவுக்கு பெல்ஜியம் கால்பந்து சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டொனால்டு டிரம்ப் தனது சமூக ஊடக அறிக்கையில் “சரியானதைச் செய்ததற்கும், மிகப்பெரிய அநீதியை மாற்றியமைத்ததற்கும் பிஃபா அமைப்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.




















