
புதுடெல்லி, ஜூலை 17- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை நடைமுறைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, பிஹாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கப்பட்டன. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் அவசர அவசரமாக எஸ்ஐஆர் நடைமுறையை மேற்கொள்ளக் கூடாது, இதை செயல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, திமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பரில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்குகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசியலமைப்புச் சட்டம் தந்த அதிகாரங்களை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதாவும், தகுதி உள்ளவர்கள் நீக்கப்படுவதற்கும், தகுதியற்றோர் சேர்க்கப்படுவதற்கும் ஏதுவான வகையில், இந்த நடைமுறை அமைந்துள்ளதாக வாதிடப்பட்டது. மேலும், தமிழகத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளதால், தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம், எஸ்ஐஆர் நடவடிக்கையை மேற்கொள்ள தடை விதிக்காததோடு, இதனால் தகுதியுள்ள நபர்கள் வாக்குரிமையை இழக்கும்பட்சத்தில் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஆதார் அட்டையை ஒரு கூடுதல் ஆவணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.














