
பெங்களூரு: ஜூலை 17 –
பெங்களூரு ஜெயநகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், லிப்ட் கதவுக்குள் தலை சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). இவர் ஜெயநகரில் உள்ள ‘தக்ஷிண் உபஹார்’ என்ற ஹோட்டலுக்கு வந்துள்ளார். இன்று காலை 8:30 மணியளவில், அங்குள்ள சரக்கு லோடு ஏற்றும் லிப்டில் ராஜேஷ் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்டுக்கு வெளியே அவர் தலையை நீட்டியபோது, கதவு மூடியதில் அவரது கழுத்து மற்றும் தலை பலமாக சிக்கிக் கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான ராஜேஷ், ஹோட்டல் உரிமையாளர் அவினாஷின் நண்பர் ஆவார். புதிதாக ஒரு ஹோட்டல் தொடங்கும் எண்ணத்தில் இருந்த ராஜேஷ், அதற்கான வேலைகளைக் கற்றுக்கொள்வதற்காக இந்த ஹோட்டலுக்கு வந்துள்ளார். வேலை பழக வந்த இடத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜெயநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













