
சென்னை: ஜூலை 17-
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளுக்கு இடையே அதிகரித்து வரும் நெருக்கம் தான். சமீபகாலமாக அடுத்தடுத்து அரங்கேறி வரும் சில முக்கிய நிகழ்வுகள், தமிழக அரசியல் களத்த்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளன.
முதல்வர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி பாராட்டு தெரிவித்து வருவது, புஸ்ஸி ஆனந்தை சந்தித்தது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் அன்புமணி பேட்மிண்டன் விளையாடியது என தவெகவுடன் சமீபகாலமாக மிகவும் நெருங்கி வருகிறது பாமக.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தவெக நோக்கிச் சென்றன. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார் விஜய். இந்நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணக்கம் காட்டி வருகிறது. முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தது முதல் தவெகவின் முக்கிய புள்ளிகளுடன் நட்பு பாராட்டுவது வரை அன்புமணியின் சமீபத்திய நடவடிக்கைகள், அவர் தவெக உடன் கூட்டணி அமைக்க விரும்புகிறாரோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தி வருகின்றன. பாராட்டிய அன்புமணி ஆளுநர் உரையில் “மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி சர்வே நடத்தும்” என்று அறிவிக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி பாராட்டு தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சமூகநீதி அறிவிப்புக்காகவே முதலமைச்சர் விஜய் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனக் கூறியிருந்தார் அன்புமணி.
தவெக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். மேலும், போதைப்பொருளுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடியது வரவேற்கத்தக்கது என்றும் அன்புமணி கூறியிருந்தார். விஜய்யை அன்புமணி தொடர்ச்சியாக பாராட்டி வருவது கவனம் பெற்றுள்ளது.













