
பெங்களூரு: ஜூலை 17 –
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், அகமதாபாத் நோக்கி புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த 6E-6423 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானத்தின் கழிவறையில் துண்டு சீட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், “தயவுசெய்து செல்ல வேண்டாம், உள்ளே வெடிகுண்டு உள்ளது” என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மிரட்டல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் விமானத்திற்குள் புகுந்து அணு அணுவாக சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, வெடிகுண்டு எதுவும் சிக்காததால் அது ‘வதந்தி’ என்பது உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மாலை 7:30 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம், இந்த மிரட்டல் காரணமாக 5 மணி நேரம் தாமதமாக, நள்ளிரவிலேயே ஏடிசி ( அனுமதியுடன் புறப்பட்டுச் சென்றது.
விமானத்தில் பயணித்த பயணியே இந்த மிரட்டல் கடிதத்தை எழுதி போட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் அளித்த புகாரின் பேரில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













