Home மாவட்டங்கள் பெங்களூர் எம்.எல்.ஏ.மீது முட்டை வீசிய வழக்கு: முதன்மை குற்றவாளி கைது

எம்.எல்.ஏ.மீது முட்டை வீசிய வழக்கு: முதன்மை குற்றவாளி கைது

பெங்களூரு: ஜூலை 23-
எம்.எல்.ஏ. ஹரீஷ் உட்பட பா.ஜ.க. தலைவர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிவாஜிநகர் போலீசார் முதன்மை குற்றவாளியான புண்யஷ் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குற்றவாளி ஒரு பெட்டியில் முட்டைகளை எடுத்து வந்து இந்த தாக்குதலை நடத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த செயலின் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். முதன்மை குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
முட்டைகள் எங்கிருந்து வாங்கப்பட்டன, இச்சம்பவம் முன் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா, முட்டை வீசுவதற்கு யாரேனும் தூண்டினார்களா மற்றும் புண்யஷுடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து நள்ளிரவு வரை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து சிவாஜிநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூடுதல் விசாரணைக்காக காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை கண்டித்து, காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று பா.ஜ.க. அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். இதற்குப் பதிலடியாக பா.ஜ.க. தலைவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, அவர்கள் மீது இந்த முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.