
சென்னை: ஜூன் 22-
சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடைசியான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்த நிலையில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு முழுவீச்சில் தொடங்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் 8 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றான சென்னை ஐ.சி.எஃப். திகழ்கிறது. இங்கு பல்வேறு வகைகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த ஆலையில் அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஆர்வம் காட்டப்படுகிறது.
வந்தே பாரத் ரயிலைப் பொருத்தவரை, ஐ.சி.எஃப்-ல் முதன் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் “ரயில் 18” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதற்கு “வந்தே பாரத் ரயில்” என்று பெயரிடப்பட்டது. இருக்கை வசதி கொண்ட இந்த ரயில் சேவை முதன்முதலாக, புதுடில்லி – வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே 80-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னதாக, ஐசிஎஃப் ஆலையில் இருக்கை வசதியுடைய 97 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டது. இதுதவிர, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பார்சல் வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில், அம்ரித் பாரத் ரயில் உள்ளிட்ட வகைகளில் ரயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டன.இவற்றில் அம்ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் அடுத்தடுத்து தயாரித்து வழங்கப்பட்டது. 16 பெட்டிகள் கொண்ட தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் ஐ.சி.எஃப் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் தற்போது ஹவுரா (மேற்கு வங்கம்) – காமாக்யா (கவுகாத்தி, அசாம்) இடையே வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியை அதிகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடைசியான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி அண்மையில் நிறைவடைந்தது. இனி வரும் காலங்களில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு முழுவீச்சில் நடைபெறவுள்ளன. அந்த வகையில், நடப்பு நிதியாண்டில் 8 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


















