Home செய்திகள் தேசிய செய்திகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங்கை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங்கை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்

புதுடெல்லி, ஆகஸ்ட் 4 – பெண் மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு டெல்லி ஜந்தர் மந்தரில் பிரபல 6 பெண் மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யூஎப்ஐ) முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில் அவரது உதவியாளர் வினோத் தோமரும் இணை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கூடுதல் தலைமை பெருநகர நடுவர் அஸ்வனி பன்வார் கடந்த மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் சாட்சியங்கள் முரண்பட்டதாகவும் கூறிய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நேற்று விடுவித்து உத்தரவிட்டது. தீர்ப்புக்குப் பிறகு பிரிஜ் பூஷன் கூறும்போது, “என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு சதித்திட்டமே. என் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்றே ஒன்று நிரூபிக்கப்பட்டாலும் கூட நான் தூக்கில் தொங்கத் தயார் என்று முதல் நாளிலிருந்தே கூறி வந்தேன். இன்று வரை அந்த வார்த்தையில் நான் உறுதியாக நிற்கிறேன்” என்றார்.