Home மாவட்டங்கள் பெங்களூர் நாடு முழுவதும் போலி மருந்துகள் விற்பனை செய்வது அம்பலம்

நாடு முழுவதும் போலி மருந்துகள் விற்பனை செய்வது அம்பலம்

பெங்களூரு, ஆக. 20-
தாவரக்கெரே அருகே உள்ள தொடேரி பகுதியில் கண்டறியப்பட்ட போலி மருந்து தயாரிப்பு கும்பலின் வலையமைப்பு, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருப்பதாக பேரதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில், நாட்டின் அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மாநில உரிம அதிகாரிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து மும்பை, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இடையே இந்த போலி மருந்து நெட்வொர்க் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கர்நாடக மருந்து கண்காணிப்புப் படையினர் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிடதி அருகிலுள்ள எண்.34, குருபரஹள்ளி கிராமத்தில் இயங்கி வந்த உரிமமில்லாத சட்டவிரோத மருந்து தயாரிப்பு மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி மருந்துகள், மொத்த கையிருப்பு சரக்குகள், பேக்கேஜிங் இயந்திரங்கள், காலியான பாட்டில்கள் மற்றும் போலி லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5,05,49,575 எனத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் மாநில எல்லைகளைத் தாண்டி நடைபெற்று வருவதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, கர்நாடக மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை நாட்டின் அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. சந்தேகத்திற்கிடமான லேபிள்கள் கொண்ட மருந்துகளோ அல்லது கர்நாடகாவில் தடை செய்யப்பட்ட பேட்ச் மருந்துகளோ கண்டறியப்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பேட்ச் மருந்துகள் விற்பனையில் உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடுதல் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் உமேஷ் அளித்துள்ள தகவலின்படி, முக்கிய மொத்த மருந்து சந்தைகள், விநியோக மையங்கள் மற்றும் சில்லறை மருந்துக்கடைகளில் திடீர் சோதனைகளை நடத்துமாறு பிற மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ‘Pfizer’ பெயரில் சந்தேகத்திற்குரிய அல்லது ஆவணங்கள் இல்லாத மருந்து சரக்குகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்கக் கூறப்பட்டுள்ளது. விலை உயர்ந்த மருந்துகளை விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களின் கொள்முதல், விற்பனை மற்றும் மருந்துகளின் உற்பத்தி ஆவணங்களை தீவிரமாகச் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உற்பத்தி மையங்களிலிருந்து குறைந்த விலையிலான ஜெனரிக் மருந்துகளை வாங்கி, அவற்றை கர்நாடகாவில் உள்ள உரிமமில்லாத இந்த மையத்தில் புதிய பாட்டில்களில் நிரப்பி, போலி லேபிள்களை ஒட்டி, அதிக விலையுள்ள இறக்குமதி மருந்துகள் போலச் சித்தரித்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த போலி மருந்து கும்பல், புற்றுநோய் உள்ளிட்ட கொடூர நோய்களுக்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் அதிக மதிப்புள்ள ஊசி மருந்துகளையும் போலியாகத் தயாரித்து இலக்கு வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போலி மருந்துகள் நோயாளிகளின் உயிரளுக்கே நேரடி ஆபத்தை விளைவிக்கும் என்பதால் மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள், அதிக விலையுள்ள இறக்குமதி மருந்துகளின் பேக்கேஜிங்கை கவனமாகப் பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான பேக்கேஜிங், பேட்ச் ஆவணங்கள் இல்லாமை அல்லது சந்தேகத்திற்குரிய விநியோகம் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் போலி மருந்துகளைத் தயாரிப்பது மட்டுமின்றி, அவற்றுக்கு போலி பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் செய்யும் பெரிய அமைப்பே இந்த மையத்தில் இயங்கி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சந்தை சோதனைகளை நடத்தி, அதன் அறிக்கை மற்றும் தகவல்களைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி மருந்து கும்பலின் முழு வலையமைப்பையும் அறுத்தெறிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.