
ஒடிஷா: ஆக. 23:
சிங்கப்பூர் நோக்கி வங்கக்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா நாட்டு சரக்கு கப்பல், ஒடிஷாவின் பாரதீப் துறைமுகம் அருகே, கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த இருவர் மீட்கப்பட்டனர். கப்பல் பணியாளர்கள் 22 பேர் மாயமாகினர்.
பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல், ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சில மணி நேரங்களில் வங்கக்கடலில் மூழ்கத் தொடங்கியது. இரும்புத்தாது லோடு ஏற்றிய இந்த சரக்கு கப்பல், சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. கப்பலில் சீனாவை சேர்ந்த 20 பேர், நம் அண்டை நாடுகளான மியான்மரை சேர்ந்த மூவர், வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் என 24 ஊழியர்கள் இருந்தனர்.
தகவல் அறிந்த இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதில் இரு ஊழியர்கள் மீட்கப்பட்டனர். மேலும் 22 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. அவ்வழியே செல்லும் மற்ற கப்பல்களையும் மீட்புப்பணியில் உதவ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












