Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் மக்கள் கூட்டம் எதிரே மெடிக்கல் கடை உரிமையாளர் கொலை

பெங்களூரில் மக்கள் கூட்டம் எதிரே மெடிக்கல் கடை உரிமையாளர் கொலை

பெங்களூரு: ஆக. 23:
பெங்களூரு மடிவாளா முக்கிய சாலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்கம்மனபாள்ளியாவைச் சேர்ந்த சுஹேல் என்பவரே பலியானவராவார். இவர் போம்மனஹள்ளியில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு 10 மணியளவில், தனது ‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் மடிவாளாவில் இருந்து கொரமங்களா நோக்கி சுஹேல் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து நெரிசலில் பைக் நின்றபோது, 2 பைக்குகளில் வந்த 4 பேர்கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் சுஹேலை கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடியது.
கடந்த ஜனவரி 13-ம் தேதி பண்டேபாள்ளியாவில் ‘ரவுடி ஷீட்டர்’ ஷபீர் என்பவர் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் சுஹேலின் சகோதரர்களான கலீம், நஜீர் உள்ளிட்டோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். கலீம் இன்னமும் சிறையில் இருக்கும் நிலையில், நஜீர் ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தான்.
சுஹேல் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லாமல் அமைதியாக மெடிக்கல் கடை நடத்தி வந்தவர். சகோதரர்கள் மீதான பகையால், பழிக்கு பழியாக ஷபீரின் ஆதரவாளர்களே அப்பாவி சுஹேலை குறிவைத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையாளிகள் சம்பவ இடத்திலேயே ஆயுதங்களை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுஹேலின் தம்பி நஜீர், “சுஹேல் எனக்கு அண்ணன் மட்டுமல்ல, தகப்பன் ஸ்தானத்தில் இருந்தவர். இந்த கொலையைச் செய்த யாரையும் சும்மா விடமாட்டேன்” என சபதம் போட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த மடிவாளா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், சுஹேலுக்கு கடைசியாக வந்த போன் கால்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.