
பெங்களூரு: ஆக. 23:
கர்நாடக மாநிலத்தையே உலுக்கி, நாட்டின் பல இடங்களுக்குப் பரவியிருந்த போலி மருந்து விற்பனை நெட்வொர்க்கின் தலைவனான நாகரபாவியைச் சேர்ந்த பிரஷாந்த் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் வெளிநாட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகளின் வலையில் விழுந்துள்ளனர்.
இந்த போலி மருந்து விற்பனை கும்பலுக்கு சர்வதேச அளவில் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடொன்றின் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் சிக்கிய நாகரபாவி பிரஷாந்த் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேற்கு ஆசிய நாட்டில் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கான மருந்துகள் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்த பிரஷாந்த் தனது கூட்டாளிகள் மூலம் சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் அதிக அளவிலான மருந்துகள் கடத்தப்படுவதைக் கண்டு சந்தேகமடைந்த அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது இந்த சட்டவிரோத செயல் வெளிச்சத்திற்கு வந்தது. விசாரணையின் போது கூட்டாளிகள் முதன்மை சூத்திரதாரி பிரஷாந்தின் பெயரைக் கூறியதை அடுத்து, அதிகாரிகள் உடனடியாக அவனையும் தம் வசம் எடுத்தனர். இந்த முக்கிய தகவலை பிரஷாந்தின் மனைவி போலிஸ் விசாரணையின் போது வெளிப்படுத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தாவரேகெரே சி.கே.தாண்ட்யாவில் உள்ள ஃபார்ம் ஹவுஸில் கிடைத்த துல்லியமான தகவலின் அடிப்படையில் போலிசார் சோதனை நடத்தியபோது, சட்டவிரோத மருந்து ரீ-பேக்கி மையம் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து, ஹரியானா, சண்டிகர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வரப்பட்ட மருந்துகளுக்கு, இங்கு பிரபல நிறுவனங்களின் போலி லேபிள்கள் மற்றும் அதிக விலை கொண்ட விலைப்பட்டியலை ஒட்டி, சந்தையில் நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
போலிசார் இந்த ஆலை மீது சோதனை நடத்துவதற்கு முன்பே, ஆகஸ்ட் 8-ஆம் தேதியே பிரஷாந்த் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டான்.
போலி மருந்து மையம் மீது சோதனை நடந்த விஷயம் தெரிந்ததும், பிரஷாந்த் தனது வியாபார பங்காளியான வெங்கடேஷை வெளிநாட்டிற்கு வரவழைக்க ஏர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தான். ஆனால், அதுகுறித்து ரகசியத் தகவல் சேகரித்த போலிசார், வெங்கடேஷ் ஏர்போர்ட் சென்றடைவதற்கு முன்பே ஹெப்பால் அருகே அவனைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பிரஷாந்த் பிடிபட்டது குறித்து விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவனை இந்தியாவிற்கு அழைத்து வர இணை போலிஸ் ஆணையர் வம்சிகிருஷ்ணா தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு இன்டர்போல் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.தாவரேகெரே சி.கே.தாண்ட்யாவில் கடந்த ஆகஸ்ட் 19 இரவில் சோதனை நடத்தி, ₹5 கோடி மதிப்புள்ள போலி மருந்துகளைப் பறிமுதல் செய்து மறுநாள் நான்கு பேரைக் கைது செய்தனர். குற்றவாளிகள் ஒரு வருடமாக இந்த போலி மருந்து தொழிலை நடத்தி வந்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக எந்த உரிமமும் இல்லாத மருந்துகளைச் சேகரித்து, அவற்றின் லேபிள்களை மாற்றி அதிக விலை கொண்ட லேபிள்களை ஒட்டி வந்துள்ளனர்.சில குறிப்பிட்ட மருந்துகளின் பெயரில் உள்ள மருந்துகளை அந்த இடத்திலேயே தயாரித்து வந்துள்ளனர். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டது. குற்றவாளிகள் போலி மருந்துகளை பெங்களூரு உட்பட பல இடங்களில் விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 276 (மருந்துகளில் கலப்படம்), 51 (குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்) மற்றும் பதிப்புரிமைச் சட்ட மீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












