Home செய்திகள் தேசிய செய்திகள் நிதி உரிமைகளை மீண்டும் கோர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நிதி உரிமைகளை மீண்டும் கோர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ஆகஸ்ட் 26-
விவாகரத்தின் போது, ஜீவனாம்சம் உள்ளிட்ட நிதி உரிமைகள் வேண்டாம் என்று ஒப்பந்தத்தில் மனைவி கையெழுத்திட்ட பின் பிற்காலத்தில் அதை மீண்டும் கோர முடியாது’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த தம்பதி, 2016-ல் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அந்த ஒப்பந்தத்தில், மனைவி தாமாக முன்வந்து ஜீவனாம்சம் உள்ளிட்ட அனைத்து விதமான பணப் பலன்களையும் கைவிடுவதாகவும், எதிர்காலத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் எந்தவித நிதியுதவியும் கோர மாட்டோம் என்றும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.
இதன் அடிப்படையில் 2017-ல், நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது. சில ஆண்டுகளுக்கு பின், விவாகரத்தான மனைவியும், அவரது மகளும் கணவருக்கு எதிராக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், பராமரிப்பு செலவு மற்றும் நிதிப் பலன்களை தரும்படி கோரினர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கணவர் தரப்பு கேரள உயர் நீதிமன்றத்தை நாடியது. ஆனால், கணவரின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சமரச ஒப்பந்தத்தின் போது மனைவி தாமாகவே முன்வந்து ஜீவனாம்சம் உள்ளிட்ட நிதி உரிமைகளை கைவிட்டுள்ளார். மேலும், அந்த சமரச ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி அவர் தனியாக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விவாகரத்திற்குப் பின் மீண்டும் குடும்ப வன்முறை சட்டத்தை பயன்படுத்தி அதே நிதி பலன்களை கோர முடியாது.
இருப்பினும், தம்பதியிடையே நடந்த சமரச ஒப்பந்தத்தில் மகள் ஒரு தரப்பினராக கையெழுத்திடவில்லை. எனவே, மகள் தனக்கான பராமரிப்பு செலவு மற்றும் நிதி பலன்களை கோரி தனியாக வழக்கு தொடர முழு உரிமை உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.