
வாஷிங்டன்: ஆகஸ்ட் 26-
‘கனடா அமெரிக்காவை பல ஆண்டுகளாகப் பொருளாதார ரீதியில் சலுகைகளுக்காக பயன்படுத்தி வந்தது; இனி அந்த நிலை தொடராது’ என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா மீது அமெரிக்க அரசு 50% இறக்குமதி வரியை விதித்துள்ளதுடன், கனடாவின் வர்த்தக முறைகேடுகள் குறித்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது எதிர் வரி விதிக்கப் போவதாகப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்கா வழங்கிய சலுகைகளை ஏற்க மறுத்து, கனடா தேசம் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைத்ததால் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டி உள்ளது.இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா பல ஆண்டுகளாக அமெரிக்காவைச் சுரண்டி வருகிறது. இனி அவர்களை இதிலிருந்து தப்பிக்க விடப்போவதில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா இல்லாமல் கனடாவால் நிலைத்திருக்க முடியாது.அமெரிக்கப் பொருளாதாரம் கனடா பொருளாதாரத்தை விட 13 மடங்கு பெரியது, மேலும் அங்கு எட்டு மடங்குக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவுக்கே தெளிவான சாதகம் உள்ளது. கனடா சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் நியாயமற்ற நாடு. அவர்கள் தங்களுக்கு உரிமை இருப்பதாக உணர்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு நாடு கிடையாது. இவ்வாறு வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.















