Home செய்திகள் தேசிய செய்திகள் டில்லியில் எஸ்ஐஆர் நடவடிக்கையால் மாற்றம்

டில்லியில் எஸ்ஐஆர் நடவடிக்கையால் மாற்றம்

புதுடில்லி, ஆக. 26- எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டில்லியில் உள்ள, 13,033 ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 14,947 ஆக உயர்த்தப்படுகிறது. டில்லியில் மேற்ககொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புச் சீரமைப்பு நடவடிக்கையின் கீழ், ஆக, 31ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. டில்லியில் மொத்தம் உள்ள 1.45 கோடி வாக்காளர்களில், 47 லட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கப்படவுள்ளனர். இந்நிலையில், ஓட்டுச்சாவடி சீரமைப்பு நடவடிக்கைகளும் இணைந்து மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது, மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், எதிர்காலத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, தற்போதுள்ள ஓட்டுச்சாவடி மையங்களை நேரில் சென்று சரிபார்த்தனர். மேலும், புதிய ஓட்டுச்சாவடி அமைக்கப்பட வேண்டிய இடங்களும் அடையாளம் காணப்பட்டன. தேர்ர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்களின் படி, புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக, தேர்தல் கமிஷன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இதற்கு முன், 1,500 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டது. தற்போது, 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என, அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, தேர்தல் கமிஷன் எடுத்த முடிவின் படி, ஒரு ஓட்டுச்சாவடிக்கான வாக்காளர் எண்ணிக்கை, 1,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது.சீரமைப்புக்குப் பிறகு, வடகிழக்கு டில்லி மாவட்டத்தில், 321 ஓட்டுச்சாவடி மையங்களில், 1,829 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். அதிகபட்சமாக இங்கு ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், டில்லியின், 13 மாவட்டங்களில், புதுடில்லி மாவட்டம் 214 ஓட்டுச்சாவடிகளுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடிக்கான வாக்காளர்களின் எண்ணிக்கையை 1,200க்குக் குறைவாகக் கொண்டுவரும் வகையில், கூடுதல் வாக்காளர்கள் அருகிலுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன், 1,585 ஓட்டுச்சாவடிகளைக் கொண்டிருந்த வடகிழக்கு மாவட்டம், சீரமைப்புக்குப் பிறகு 1,829 ஓட்டுச்சாவடிகளுடன் அதிகபட்ச எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மையங்களின் எண்ணிக்கையும் 295-ல் இருந்து 321-ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு மாவட்டத்தில், தற்போது 1,564 ஓட்டுச்சாவடிகளும், கிழக்கு மாவட்டத்தில் 1,543, மேற்கு மாவட்டத்தில் 1,543, வடமேற்கு மாவட்டத்தில் 1,403 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.ஓட்டுச்சாவடி மையங்களின் எண்ணிக்கையிலும், 321 மையங்களுடன் வடகிழக்கு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, மேற்கு மாவட்டத்தில் 316 மையங்களும், கிழக்கு மாவட்டத்தில் 276, தென்கிழக்கு மாவட்டத்தில் 264 மற்றும் தென்மேற்கு மாவட்டத்தில், 252 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைகின்றன.