Home மாவட்டங்கள் பெங்களூர் ஆர்.டி. நகரில் 30 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்: 150 மீட்டர் சுவர் வண்ணமயமாக மாற்றம்

ஆர்.டி. நகரில் 30 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்: 150 மீட்டர் சுவர் வண்ணமயமாக மாற்றம்

பெங்களூர், ஆகஸ்ட் 30-

பெங்களூரு வட மாநகராட்சி  சார்பில், ஹெப்பாள் பிரிவுக்கு உட்பட்ட ஆர்.டி. நகரில் இன்று சிறப்புத் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மாநில வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா வழிகாட்டுதலின்படியும், மாநகராட்சி ஆணையர் பொம்மல சுனில் குமார் உத்தரவின்படியும் இந்தத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

சி.ஐ.எல் சாலையில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் சிலை அருகில் நடைபெற்ற இந்த முகாமில், மாநகராட்சி கூடுதல் ஆணையர் பல்லவி, ‘அக்லி இந்தியா’ அமைப்பின் அருண் பை, பாராசூட் ரெஜிமென்ட் பள்ளி என்.சி.சி மாணவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்தப் பகுதியிலிருந்த சுமார் 30 டன் கட்டிடக் கழிவுகள் மற்றும் குப்பைகள் முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், பொதுமக்கள் நடமாட்டத்திற்கு இடையூறாக இருந்த சட்டவிரோத வாகன நிறுத்தங்களும் அகற்றப்பட்டு, அப்பகுதி சுத்தமாக்கப்பட்டது.

தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக, சுமார் 150 மீட்டர் நீளமுள்ள சுவர் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, அழகிய ஓவியங்கள் மற்றும் வண்ணங்கள் தீட்டப்பட்டன. இதனால் அப்பகுதியே புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.

சுத்தம் செய்யப்பட்ட இடங்களை மீண்டும் அசுசிப்படுத்தாமல், பொது இடங்களைப் பராமரிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.