
நியூயார்க்/புதுடெல்லி, ஆக. 30- “யாராவது ஒரு இந்து, இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைத்தால், அவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது,” என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத் மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உலகளாவிய தொடர்ப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா சென்றுள்ள அவர், நியூயார்க்கில் ’அமெரிக்கன் இந்துஸ் ஃபார் ஏங்கேஜ்மென்ட் அண்ட் டயலாக்’ அமைப்பு நடத்திய ‘ஒரே உலகம், ஒரே மனிதநேயம்’ மற்றும் உலக ஒற்றுமை கொண்டாட்டத்தின் ரக்ஷாபந்தன் மாநாட்டில் முதன்மை உரையாற்றினார்.
மாநாட்டில் பங்கேற்ற மதப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய பகவத், “முன்பு ஒரு முறை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முஸ்லிம் சகோதரர்கள் என்னிடம் வந்து, ’நீங்கள் இந்து ராஷ்டிரம் பற்றி பேசுகிறீர்களே, எங்களைப் போன்ற முஸ்லிம்களின் நிலை என்ன? எங்களை நாட்டிலிருந்து வெளியேற்றி விடுவீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு நான், நிச்சயமாக இல்லை, அது இந்துத்துவத்தின் தத்துவமே அல்ல. இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று விரும்புபவன் இந்துவாக இருக்க முடியாது’ என்று பதிலளித்தேன்” என நினைவுகூர்ந்தார்.
“அமெரிக்காவைக் குறிப்பிடும்போது ‘பன்மைத்துவம்’ என்ற வார்த்தை முன்வைக்கப்படுகிறது. இந்தியாவின் விஷயம் வரும்போது ’வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பேச்சு வருகிறது. இந்த இரண்டு மதிப்புகளும் இந்திய கலாச்சாரத்தின் ரத்தத்திலேயே ஊறிப்போயுள்ளன,” என்றார்.
உலகில் மதங்களும் வழிபாடுகளும் வெவ்வேறாக இருந்தாலும் மனிதநேயம் ஒன்றே. உண்மை ஒன்றே, அதைப் புரிந்துகொள்ளும் மற்றும் விளக்கும் வழிகள்தான் வேறு வேறாக இருக்கின்றன. அனைத்து மத வழிகளும் இறுதியில் ஒரே பரம்பொருளை நோக்கியே செல்கின்றன என்று நம்புவதே இந்துத்துவம் என்றார்.
மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூகத் தலைவர்களிடையே உரையாற்றிய அவர், “நீங்கள் தற்போது வசிக்கும் அமெரிக்காவே உங்கள் கர்மபூமி. எனவே அந்த நாட்டிற்கு உண்மையாகவும், அங்குள்ள வளர்ச்சிக்கு பாடுபடுவதும் உங்கள் முதல் கடமையாகும். அதே வேளையில் உங்கள் தாய்நாடான இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மனிதநேய மதிப்புகளை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழுங்கள்,” என்று கோரிக்கை விடுத்தார்.
“சமுதாயத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர அரசியலால் முடியாது. தற்போதைய அரசியல் சுயநல விளையாட்டாக மாறியுள்ளது. ‘நான்’ மற்றும் ‘என்னுடையது’ என்பதில் பிரச்சனைக்குத் தீர்வில்லை; ‘நாம்’ மற்றும் ‘நம்முடையது’ என்று நினைக்கும் போது மட்டுமே தீர்வு கிடைக்கும்,” என்று கருத்து தெரிவித்தார்.
1996-இல் ஹரியானாவின் சார்க்கி தாத்ரியில் நடந்த விமான விபத்தில் அரபு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் பயணிகளே அதிகமாக இருந்தனர். அப்போது எந்தவித லாப நோக்கமும் இன்றி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இரவு பகலாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் நினைவுகூர்ந்தார்.
’வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற இந்திய சனாதனக் கோட்பாட்டை பலமாக வலியுறுத்திய பகவத், செயற்கையாக உருவாக்கப்பட்ட பாகுபாடுகளை மறந்து மனிதநேய பந்தத்தைப் பலப்படுத்த கோரிக்கை விடுத்தார். விழாவில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.















