
லக்னோ: ஆக. 31:
உத்தர பிரதேசத்தில் பெய்த தொடர் மழையால், அங்குள்ள மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம், 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அங்குள்ள முக்கிய நகரப் பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேச எல்லை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சித்ரகூட்டில் உள்ள மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 4.1 அடியை கடந்து, 4.39 அடியை எட்டியதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீர்மட்டம் அதிகரிப்பு
ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரையோரம் உள்ள ராம்காட், நிர்மோஹி அஹாரா உள்ளிட்ட முக்கிய பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின.
இவை தவிர, அங்குள்ள நுாற்றுக்கணக்கான கடைகள், மடங்கள் மற்றும் கோவில்களுக்குள் வெள்ள நீர் புகுந்துஉள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.ராம்காட் – ஹனுமந்தாரா வழித்தடத்தில் இருந்த பாலம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதேபோல், கார்வி பகுதியில் உள்ள பாலத்தின் மீது நீர்மட்டம் உயர்ந்ததால், ஜான்சி – மிர்சாபூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.













