Home மாவட்டங்கள் பெங்களூர் மலைப் பகுதிகளில் தொடரும் விபத்துக்கள்: கர்நாடக வனத்துறை அதிரடி உத்தரவு

மலைப் பகுதிகளில் தொடரும் விபத்துக்கள்: கர்நாடக வனத்துறை அதிரடி உத்தரவு

பெங்களூரு, ஆக. 31:
மேற்கு தொடர்ச்சி மலை உட்பட கர்நாடக வனப்பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் தாக்குதலும், மலையேற்றப் (Trekking) பயணிகளின் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய கடுமையான கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
மலை மகதேஸ்வரா மலையில் 10 வயது சிறுவனை கொடூரமாக அடித்துக் கொன்ற சிறுத்தை, பண்டாஜே நீர்வீழ்ச்சி பாதையில் மலையேற்றம் சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த பெண், தடியண்டமோல் வனப்பகுதியில் வழிதவறி மாயமாகி வனத்துறையினரால் போராடி மீட்கப்பட்ட கேரள பெண் எனத் தொடரும் சம்பவங்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்தான் வனத்துறை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 39 அங்கீகரிக்கப்பட்ட பாதைகளில் இனி அளவுக்கு அதிகமாக ஆட்களை அனுமதிக்க முடியாது. கூட்டம் சேருவதைத் தடுக்க பயணிகளின் எண்ணிக்கைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. குதுரேமுக் போன்ற பாதுகாப்பான பாதைகள் மட்டுமே படிப்படியாகத் திறக்கப்படும். விதிகளை மீறும் நபர்களும், போலி வழிகாட்டிகளும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பயணிகள் எங்கு செல்கிறார்கள் என்பதை நொடிக்கு நொடி கண்காணிக்க புதிய ஜி.பி.எஸ் (GPS) டிராக்கிங் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூர் இளைஞர்களே இனி அதிகாரப்பூர்வ வழிகாட்டிகளாக நியமிக்கப்படுவார்கள். பயணிகள் வழிதவறுவதைத் தடுக்க முக்கிய இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் உடனடியாகச் சம்பவ இடத்திற்குப் பாய பலப்படுத்தப்பட்ட சிறப்பு மீட்புக் படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.