
பெங்களூரு, ஆக. 31:
பெங்களூரு நகரில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போக்குவரத்து போலீசார் தீவிர வேட்டை நடத்தினார்கள்.
கடந்த ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 30) இரவு வரை நகரில் உள்ள 53 போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது மொத்தம் 36,654 வாகனங்கள் மறிக்கப்பட்டு தீவிர தணிக்கை செய்யப்பட்டது.
இதில், மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி வந்த 566 டிரைவர்கள் மற்றும் பைக் ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுமட்டுமின்றி, நகரில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களை பிடிக்க நடத்தப்பட்ட தனி சோதனையில் 244 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2.48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது இதுபோன்ற சிறப்பு சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று போக்குவரத்து பிரிவு இணை போலீஸ் கமிஷனர் கார்த்திக் ரெட்டி எச்சரித்துள்ளார்.













