
சிவகங்கை: ஜூலை 5 –
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்துவிட்டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்னதாக கூறி, போலீஸார் தங்கள் வாகனத்தில் எடுத்து சென்றனர் என்று மதுரை மாவட்ட நீதிபதியிடம் அரசு மருத்துவர் சாட்சியம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் கடந்த 2-ம் தேதி திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கி, விசாரணையை தொடங்கினார். அன்றைய தினம் சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர், வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் உட்பட பலரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக நீதிபதி விசாரணை நடத்தினார்.
2-வது நாளில் (ஜூலை 3) கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாணை நடத்தினார். அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார் வாக்குமூலம் அளித்தனர்.இந்நிலையில், 3-வது நாள் விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் காலை 8.45 மணி அளவில் விசாரணையை தொடங்கினார். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சம்பவ நாளன்று பணியில் இருந்த மருத்துவர் கார்த்திகேயன், அஜித்குமாரை போலீஸார் ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், மடப்புரம் காளிகோயில் முன்பு பழக்கடை நடத்தும் வியாபாரிகள், திருப்புவனம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அஜித்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
அஜித்குமாரை முதலில் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குதான் போலீஸார் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்து, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனாலும்,பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உடலை போலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த தகவலை மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் நேற்று சாட்சியமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் கூறியதாவது: ஜூன் 28-ம் தேதி மாலை 6.35 மணிக்கு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அஜித்குமாரை போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்து, போலீஸாரிடம் தெரிவித்தேன். பின்னர், உடலை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்குமாறு கூறினேன். ஆனால், தனிப்படை போலீஸார், உயர்அதிகாரிகள் சொன்னதாக கூறி, உடலைஅவர்களது வாகனத்தில் எடுத்துச் சென்றனர். இதை நீதிபதியிடம் தெரிவித்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மடப்புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் கூறும்போது, ‘‘எனது ஆட்டோவில்தான் போலீஸார் அஜித்குமாரை ஏற்றி, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அஜித்குமாரை 4 போலீஸார் தூக்கி வந்தனர். அப்போது அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. கண்கள் மூடி இருந்தன. அவர் உயிரிழந்துவிட்டதாக போலீஸாரும் பேசிக் கொண்டனர். இதை நீதிபதியிடம் தெரிவித்தேன்’’ என்றார்.
தனிப்படை போலீஸார் கொடூரமாக தாக்கியதில் விசாரணையின்போதே அஜித்குமார் உயிரிழந்துள்ளார். ஆனால், போலீஸார் அதை மறைக்கும் விதமாக, ‘‘நாங்கள் விசாரிக்கும்போது, அஜித்குமார் தப்பியோட முயன்று கீழே விழுந்துவிட்டார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், ஆட்டோவில் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து சிவகங்கை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றோம். பின்னர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்’’ என்று ஆரம்பத்தில் கூறியிருந்தனர். இந்த நிலையில், முதலில் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே, அஜித்குமார் உயிரிழந்துவிட்டார் என்பது தற்போது அரசு மருத்துவரின் சாட்சியம் மூலம் உறுதியாகியுள்ளது.