
சென்னை: ஜூலை 7-
குதிரை பேரம் தொடர்பான வழக்கில் சம்மன் அனுப்பியும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் நேற்று ஆஜராகாததால், அவர்களை கைது செய்ய தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது, அரசுக்கு எதிராக வாக்களித்தால் ரூ.35 கோடி தருவதாக திமுகவினர் தன்னிடம் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் கொடுத்தார். ஆட்சியைக் கவிழ்க்க கார்ப்பரேட் நிறுவனம் மூலம் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்து, யூ-டியூபர் திருநாவுக்கரசு உட்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் இருப்பது அம்பலமானதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் அவர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவர்களது பூர்வீக இல்லத்தில், தந்தை வேலுச்சாமியிடம் போலீஸார் சம்மன் வழங்கினர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்று (ஜூலை 6) காலை 10.30 மணிக்கு இருவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் நேற்று ஆஜராகவில்லை.
அவர்களது செல்போன்கள் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தன. அவர்கள் தரப்பில் வழக்கறிஞர்களும் யாரும் வரவில்லை. எந்த நேரத்திலும் கைது இதையடுத்து, இருவருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பலாமா அல்லது வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்று போலீஸார் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.













