Home மாவட்டங்கள் பெங்களூர் வைர நகை, புடவை ஆசை காட்டி பெங்களூரு பெண்ணிடம் ரூ.1.75 கோடி மோசடி

வைர நகை, புடவை ஆசை காட்டி பெங்களூரு பெண்ணிடம் ரூ.1.75 கோடி மோசடி

பெங்களூரு: ஜூலை 28-
விலையுயர்ந்த புடவை மற்றும் வைர நகைகள் பரிசாகத் தருவதாகக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1.75 மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெங்களூரு யஷ்வந்த்பூர் பகுதியச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, ‘சாஹில் ஜுக்கல்’ என்பவருடன் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. லண்டனில் பணிபுரிவதாகக் கூறிய அந்த நபர், செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்டு அப்பெண்ணிடம் நெருக்கமாகப் பேசியுள்ளார்.
ஒரு கட்டத்தில், வெளிநாட்டிலிருந்து விலையுயர்ந்த புடவை, ரத்தினங்கள் மற்றும் வைர நகைகளை அவருக்குப் பரிசாக அனுப்புவதாகக் கூறி நம்பவைத்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு அப்பெண்ணைத் தொடர்புகொண்ட சாஹில், பரிசுப் பொருட்கள் வந்துவிட்டன. ஆனால் என்னிடம் இந்திய பணம் இல்லை. கஸ்டம்ஸ் வரி கட்டுவதற்காகத் தற்காலிகமாக ரூ.40 லட்சம் கொடுங்கள். இந்தியா வந்ததும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் எனப் பெண் கேட்டபோது, கிழிந்த 10 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை அனுப்பிய சாஹில், அதேபோல அரைகுறை நோட்டைக் காட்டும் நபரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதை நம்பி ஒரு ஹோட்டலுக்குச் சென்ற அப்பெண், அந்த கிழிந்த நோட்டைக் காட்டிய நபரிடம் ரூ.40 லட்சத்தைக் கொடுத்துள்ளார். இதன்பின்னர், கஸ்டம்ஸ் அதிகாரி போலப் பேசிய மற்றொரு நபர், பரிசில் உள்ள வைர நகைகளின் மதிப்பு அதிகம் என்பதால் கூடுதல் வரி கட்ட வேண்டும் எனக் கூறி, பல்வேறு காரணங்களைக் காட்டி சிறுகச் சிறுக மொத்தம் ரூ.1.75 கோடியைப் பறித்துள்ளார்.
நீண்ட நாட்களாகியும் பரிசுப் பொருட்கள் வராததால் சந்தேகமடைந்த அப்பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வட மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.