
ஜெய்சால்மர்: ஜூலை 1 –
விசா மறுக்கப்பட்டதால் சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த, பாகிஸ்தான் தம்பதிதார் பாலைவனத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (17). இவரது மனைவி சாந்திபாய் (15). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தானில் ரவிக்குமாருக்கு சரியான வேலை இல்லை. இந்தியாவுக்குச் சென்றால் நல்ல வேலை கிடைத்து மனைவியுடன் சுகமாக வாழலாம் என ரவிக்குமார் நினைத்தார். இதற்காக இருவரும் விசா கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் விசா மறுக்கப்பட்டது. இதையடுத்து, இவர்கள் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து ராஜஸ்தானுக்குள் வந்தனர். ஜெய்சால்மர் பகுதியிலுள்ள தார் பாலைவனத்தின் வழியாக இவர்கள் பயணித்தபோது இறந்து விட்டனர்.
போதிய குடிநீர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும், உடலில் நீர்ச்சத்து குறைந்ததன் காரணமாக இவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியான தாகத்தால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்களது சடலங்கள் கடந்த சனிக்கிழமை கிடைத்துள்ளன. இதுகுறித்து ஜெய்சால்மர் போலீஸ் எஸ்.பி. சுதிர் சவுத்ரி கூறும்போது, “தார் பாலைவனத்திலுள்ள பிபியான் பகுதியில் இவர்களது உடல்கள் கிடைத்துள்ளன.
பாகிஸ்தானிலிருந்து வரும்போது இவர்கள் குடிப்பதற்காக பெரிய அளவிலான குடிநீர் கேனை கொண்டு வந்துள்ளனர். குடிநீர் தீர்ந்துவிட்டதால் அதிகப்படியான தாகத்தால் அவர்கள் தவித்துள்ளனர். கடைசி வரை உயிருக்காகப் போராடி இறந்துவிட்டனர். அவர்களது உடல் அருகே காலியான குடிநீர் கேன் இருந்துள்ளது” என்றார்.
இதுகுறித்து ராஜஸ்தானிலுள்ள இந்து – பாகிஸ்தானி புலம்பெயர்ந்தோர் யூனியன் மற்றும் எல்லையோர மக்கள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீப் சிங் சோதா கூறும்போது, “இருவரின் உடல்களையும் இந்திய அரசு ஒப்படைத்தால் அதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய ரவிக்குமாரின் உறவினர்கள் பாகிஸ்தானில் காத்திருக்கின்றனர். ஒருவேளை உடல்களை ஒப்படைக்காவிட்டால், இந்து மதத்தின்படி அங்கு சடங்குகளை அவர்கள் செய்துவிடுவர்’’ என்றார்.