Home மாவட்டங்கள் பெங்களூர் சபாநாயகர் மரபு குறித்து சட்டசபையில் குட்டிக் கதை சொன்ன முதல்வர் விஜய்

சபாநாயகர் மரபு குறித்து சட்டசபையில் குட்டிக் கதை சொன்ன முதல்வர் விஜய்

சென்னை: மே 12 –
சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் இன்று தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
சபாநாயகரை வாழ்த்தி முதல்வர் விஜய் பேசியதாவது: “மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி என்றார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன். அதிகமான மக்கள் அதிக நன்மைகளை இந்த ஆட்சிகாலத்தில் பெற்றுள்ளார்கள் என்னும் அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும் .இங்கு அனைவரும் சமம். ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகள் இங்கு இடம்பெற்றிருந்தாலும் அவர்களுடைய கருத்துகளும், அதிக உறுப்பினர்களை கொண்ட தவெக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளும் சமமாகவே மதிக்கப்பட வேண்டும்.
அதற்குரிய வகையில் இப்பேரவையை நடத்திச் செல்லக்கூடியவரையே தமிழக வெற்றிக் கழகம் முன்மொழிந்துள்ளது. பேரவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபப்ட்டுள்ளார். அவரை பேரவை முன்னவரும், எதிர்கட்சி தலைவரும் தங்கள் கரங்களை பிடித்து இருக்கையில் அமரவைத்தனர்.
இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்றால், இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறைகளை போன்றது நம்முடைய நடைமுறையும். மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்கு நாடாளுமன்றம் இருந்துள்ளது. அங்கு மன்னர் ஒரு விஷயம் செய்ய விரும்புவார். ஆனால் அதை நாடாளுமன்றம் பெரும்பாலும் நிராகரித்து விடும். அதை மன்னரிடம் தெரியப்படுத்துபவரே நாடாளுமன்ற சபாநாயகர். அதற்கு மிகுந்த துணிவு வேண்டும். மன்னருக்கு சில பணிகளை செய்வதற்குதான் நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும்.
தான் நிறைவேற்றியதை நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது என்று சொல்லும் சபாநாயகருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கூட மன்னர் ஆணையிடுவார். அதனால் இந்த சபாநாயகர் பதவிக்கு யாரும் வரமாட்டார்கள்.
எனவே புதிய நாடாளுமன்றம் அமையும்போது சபாநாயகர் பதவிக்கு ஒருவரை அறிவிக்கும்போது அவர் தலை தப்பித்தால் போதும் என்று ஓடிவிடுவார். அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் அவர் கையைப் பிடித்து இழுத்துவந்து ஆசனத்தில் அமரவைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது. நிச்சயமாக தவெக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள் என்று வாக்குறுதி அளிக்க விரும்புகிறேன்” இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.