Home மாவட்டங்கள் பெங்களூர் லாரி வேன் மோதல்: 5 பேர் சாவு 6 பேர் படுகாயம்

லாரி வேன் மோதல்: 5 பேர் சாவு 6 பேர் படுகாயம்

கொப்பல்: ஜூன் 27-
மந்திராலயத்திற்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் ஓமினி வேன் மீது, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ரோடு டிவைடரை தாண்டி வந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குக்கனூர் தாலுகா பானாப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 63-ல் இன்று அதிகாலை அரங்கேறியுள்ளது.
ஹாவேரி மாவட்டம் ரட்டிஹள்ளி தாலுகாப்பார் கிராமத்தைச் சேர்ந்த பாலேகாயิ (35), அம்ருதா கோட்யாள் (25) மற்றும் ரமேஷ் பல்லாரி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உயிருக்கு போராடிய பிரவீண் பாலேகாயி (40) மற்றும் மற்றொருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
பலியானவர்கள் உட்பட 11 பேர் ஓமினி வேனில் இன்று அதிகாலை மந்திராலயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பானாப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், பக்கத்து ரோட்டில் அதிவேகமாக வந்த அசோக் லேலண்ட் லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ரோடு டிவைடரை (மத்திய தடுப்புச்சுவர்) தாண்டி பாய்ந்த அந்த லாரி, எதிரே வந்த ஓமினி வேன் மீது அசுர வேகத்தில் மோதி அப்பளமாக நொறுக்கியது.
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு, கொப்பளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.