
ரியாத், செப். 15- மேற்காசியாவில் போர் சூழல் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 1.10 கோடி டன் யுரேனியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமையின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சவுதி அரேபியாவின் எரிசக்தித் துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சவுதி அரேபியாவின் மதினா பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஜபல் சயீத்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வில், 1.10 கோடி டன் யுரேனியம் செறிந்த தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனுடன், பிற அரிய வகை கனிமங்களும் அப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான பணிகள், மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வின் அடிப்படையில் தெரியவந்துள்ளன. யுரேனியம் செறிந்த தாதுவுடன் கண்டறியப்பட்டுள்ள பிற அரிய கனிமங்களையும் பிரித்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக, ஒப்பந்தத்தின் கீழ் சவுதி அரேபியாவின் சுரங்க நிறுவனமான மாடன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எம்.பி., மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன. இரு நிறுவனங்களும் இணைந்து, கண்டறியப்பட்டுள்ள அரிய கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.














