
புதுடெல்லி: மே 22-
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார்.
சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் விரும்புகிறார். இதனால், உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்விரு கட்சிகளும் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தன. ஆனால், குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. எனினும், 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.இதில், உ.பி.யில் ஆளும் பாஜகவை வெற்றிகரமாக வீழ்த்தி, சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 எம்.பி.க்களைப் பெற்றன. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 33, அதன் கூட்டணிக் கட்சிளுக்கு 3 இடங்கள் கிடைத்தன. பாஜக 41.37 சதவீத வாக்குகள் பெற்றது. சமாஜ்வாதி 33.59 மற்றும் காங்கிரஸ் 9.46 சதவீத வாக்குகள் பெற்றன.பாஜகவை விட சமாஜ்வாதியும், காங்கிரஸும் அதிக வாக்குகளைப் பெற்றதால் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் இணைய இரு கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. இதுகுறித்து அகிலேஷ் கூறும்போது, ”2027 தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகளுடனான இணக்கம் தொடரும். அப்போது முக்கியக் கேள்வி வெற்றியாகத் தான் இருக்குமே தவிர தொகுதிகள் அல்ல” என்றார்.


















