
மும்பை, பிப். 7- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நடப்பு சாம்பியன் அணியாக திகழும் எந்த அணியும் பட்டத்தை தக்கவைத்தது இல்லை. இந்த வரலாற்றை இம்முறை இந்திய அணி திருத்தி எழுதக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக திகழ்கிறது. கடந்த உலகக் கோப்பையில் அணியின் தூண்களாக திகழ்ந்த ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இம்முறை இல்லாவிட்டாலும் அணியின் பலத்தில் எந்தவித குறைவும் இல்லாமல் உள்ளது. இதற்கு சாட்சியாக 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற 9 டி20 தொடர்களை இந்தியா வென்றுள்ளது. இதில் ஆசியக் கோப்பை தொடரும் அடங்கும். பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியில் மிரட்டக் கூடியவர்களாக திகழ்கின்றனர். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷிவம் துபே ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஆட்டத்தின் எந்த தருணத்திலும் கைகொடுக்கக்கூடியவர்கள். பிரதான பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோரும் அசத்த காத்திருக்கின்றனர்.அமெரிக்கா அணி கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. மேலும் அந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கும் சவால்விடுத்தது. அமெரிக்க அணியில் உள்ள ஷுபம் ரஞ்சனே, ஹர்மீத் சிங், சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் தங்களது இளமைக் காலங்களில் மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி உள்ளனர். அந்த அனுபவம் அவர்களுக்கு கைகொடுக்கக்கூடும். கடந்த ஆண்டு நடைபெற்ற 9 டி20 ஆட்டங்களில் அமெரிக்க அணி 8-ல் வெற்றியை பதிவு செய்திருந்தது. மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடருக்காக இலங்கையில் 3 வாரகாலம் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டது. பேட்டிங்கில் கேப்டன் மோனங்க் படேல், சைதேஜா முக்கமல்லா, மிலிந்த் குமார் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.














