
இஸ்லாமாபாத் : ஆக. 4-
‘அமைதியான நோக்கங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த ஈரானுக்கு முழு உரிமை உண்டு,” என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான் அரசு முறை பயணமாக நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு நேற்று முன்தினம் வந்தார். தலைநகர் இஸ்லாமபாதில், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை அவர் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
அப்போது, பாக்., – ஈரான் இடையே வர்த்தகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, கலாசாரம், கலை, சுற்றுலா, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுதோறும், 69,500 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இரு தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ”காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஏற்க முடியாது. மேற்காசிய பிராந்தியத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பாதுகாக்க முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும். ”ஈரானில் இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அமைதியான நோக்கங்களுக்கு அணு சக்தியை பயன்படுத்த ஈரானுக்கு முழு உரிமை உண்டு,” என்றார். ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான் பேசுகையில், ”தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுடன் பேச்சு நடத்தினேன். விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்,” என்றார்.