
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ (Fraud) என அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முடிவை வங்கி 2025 ஜூன் 23ஆம் தேதி எடுத்துள்ளது. இதுதொடர்பாக ஜூன் 30ஆம் தேதி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பங்குச்சந்தை விதிமுறைகளின் படி, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனம் கூறியதாவது, “ஜூன் 23ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட SBI-யின் கடிதம், ஜூன் 30ஆம் தேதி எங்களால் பெறப்பட்டது. இந்தக் கடிதம் நிறுவனத்திற்கும், அதன் முன்னாள் இயக்குநரான அனில் திராஜ்லால் அம்பானிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ (Fraud) என்று SBI தீர்மானித்துள்ளது. இதனுடன், முன்னாள் இயக்குநரான அனில் அம்பானியின் பெயரையும், இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) தற்போதுள்ள விதிமுறைகளுக்கேற்ப புகார் அளிக்கப்போவதாக SBI தெரிவித்துள்ளது” என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை “மோசடி” என வகைப்படுத்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), இது ஓர் திடீர் முடிவல்ல என தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் நிறுவனத்திற்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அந்நிறுவனம் வழங்கிய பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. கடன் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்கான காரணம் நிறுவனம் சரியாக விளக்கவில்லை என்றும் கணக்கு எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பற்றிய சந்தேகங்களுக்கு, நிறுவனம் முழுமையான பதில்களைக் கொடுக்கத் தவறியதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
அதன்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் விவகாரம் குறித்து, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மோசடி அடையாளக் குழு (Fraud Identification Committee) இறுதி முடிவெடுத்துள்ளது. நிறுவனம் விதிமுறைகளை மீறியுள்ளதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதை அந்த குழு கண்டறிந்துள்ளது. அதன்பேரில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பெயரும், அதன் முன்னாள் இயக்குநரான அனில் அம்பானியின் பெயரும், இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட உள்ளன. இது வங்கித் துறையின் விதிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். இதுகுறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கூறுகையில், “எஸ்பிஐ கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன்கள், திவாலா நடவடிக்கைக்கு முந்தைய காலத்துக்கானவை. எனவே, அவை அனைத்தும் தீர்வு திட்டத்திலேயே முடிக்கப்பட வேண்டும். இது, திவாலா மற்றும் மறுசீரமைப்புச் சட்டத்தின் (IBC) விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஐபிசி 32A-ன் கீழ், தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் தீர்வு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியவுடன், திவாலா நடவடிக்கைக்கு முன் ஏற்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டுகளுக்கும் நிறுவனத்திற்கு பொறுப்பு ஏற்படாது. இனி எப்படிச் செயல்படுவது என்பது குறித்தும் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.