அமர்நாத் யாத்திரை – பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிஎஸ்பி வீரர்கள்

டெல்லி:ஜூலை 14- அமர்நாத் யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயணத்தை பிஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பானதாக மாற்றியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடங்கி, பக்தர்களுக்கு மருத்துவ முதலுதவி அளிப்பது வரை வீரர்கள் இரவும் பகலும் பாடுபட்டு வருகிறார்கள். அமர்நாத் யாத்திரையின் போது பிஎஸ்எஃப் குழுக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உதவி செய்து வருகின்றன. மருத்துவ உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, அவர்கள் பாதுகாப்பாக இருக்க உறுதியாக செயல்படுகின்றன.இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய யாத்திரையில், 1.75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புனித குகையை சென்றடைந்துள்ளனர். செங்குத்தான ஏற்றங்கள், குளிர்ந்த வானிலை மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் காரணமாக பக்தர்கள் பலர் சோர்வு மற்றும் சுவாச சிரமங்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு வீரர்கள் உதவி செய்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவியில் பிஎஸ்எஃப் பாஹல்காம் மற்றும் பால்தால் பாதைகளில் பிஎஸ்எஃப் குழுக்கள் மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குகின்றன. அவசர நிலைகளை சமாளிக்க பயிற்சி பெற்ற இக்குழுக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், முதலுதவி கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் செயல்படுகின்றன. “ஒவ்வொரு பக்தர்களுக்கும் உதவ நாங்கள் 24/7 தயாராக உள்ளோம்,” என்று பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு உடனடி ஆக்ஸிஜன் ஆதரவு வழங்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள்.