
பெங்களூரு: ஜூலை 16-
பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோளியின் மைத்துனரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான டாக்டர் ஒய். மஞ்சுநாத் உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத்துறை (இ.டி.) மேற்கொண்டு வரும் சோதனை மற்றும் சொத்து பறிமுதல் விவகாரத்தில், அவர்கள் மீது கடுமையான எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி பெங்களூரு, கோவா மற்றும் பெலகாவி ஆகிய இடங்களில் உள்ள மனுதாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை எதிர்த்து டாக்டர் மஞ்சுநாத் மற்றும் அவரது உறவினர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விசாரணையின் போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊழலுக்கு எதிரான போரில் அமலாக்கத்துறை ஒரு போர்வீரனாக செயல்படலாம். ஆனால், அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும். எந்தவொரு துறையிலும் ஊழலை ஒழிக்கும் ஆர்வம் இருந்தால், அதனை சட்டப்படி செய்ய வேண்டும். அப்போது நீதிமன்றங்கள் தலையிடாது.”
மேலும், இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதுவரை அமலாக்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடரக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக நடைபெற்ற வாதங்களின் போது, “பணப்பரிமாற்றம் நடந்ததற்கான தொடர்பு இருக்க வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாத நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவ்வளவு எளிதாக நீங்கள் யாரையும் இதில் சிக்க வைக்க முடியாது. அமலாக்கத்துறை யார் வீட்டை வேண்டுமானாலும் சோதனை செய்யலாம், ஆனால் அதற்குப் பின்னணியில் முறையான குற்றப் பின்னணி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளியாக இருக்க வேண்டும் அல்லது பணப்பரிமாற்றத் தொடர்பு இருக்க வேண்டும். இந்த வழக்கில் உள்ள நபர்கள் யார்? அவர்களுக்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், “ரூ. 25 லட்சம் லஞ்சம் வாங்கும்போது ஒருவர் பிடிபட்டது குற்ற நடவடிக்கைதான். லஞ்சம் வாங்கியவருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதற்கும் சம்பந்தமே இல்லாத நபர்களிடம் அமலாக்கத்துறை எவ்வாறு விசாரணை நடத்த முடியும்?” என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை. அமலாக்கத்துறையின் செய்திக்குறிப்பு பி.எம்.எல்.ஏ. சட்ட வரம்பிற்குள் வராது. மனுதாரர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து விளக்கம் அளிக்கக் கால அவகாசம் தேவை என்றும் கோரினார்
அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள மனுதாரர்கள், “எங்கள் மீது எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், பி.எம்.எல்.ஏ. பிரிவு 17-ன் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ள இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஜெகதீஷ் நாயக் என்பவர் ரூ. 25 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார். அதன் அடிப்படையில் லோகாயுக்தா போலீஸார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நாங்கள் குற்றவாளிகளும் அல்ல, இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்க, அமலாக்கத்துறை இதனை ஒரு குற்றப் பின்னணியாகக் காட்டி நடவடிக்கை எடுப்பது சட்டப்படி செல்லாது” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.













