
பெங்களூரு: ஜூலை 16-
காதலை நிராகரித்ததால் சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவரை ஜீவன் பீமா நகர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தனியார் கல்லூரி ஒன்றில் 4-ஆம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வந்த அம்ருதா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அவரது காதலன் தனுஷ் மற்றும் அவனது தம்பி சூர்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை 13-ஆம் தேதி அம்ருதா மீது கத்தியால் பயங்கரமான முறையில் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர், கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
எச்.ஏ.எல். கோடிசிக்கனஹள்ளி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அம்ருதாவுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓம்சக்தி மாலை போடும் போது தனுஷ் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.
தன்னை காதலித்த தனுஷிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனதும், ஒரு குழந்தை இருப்பதும் அம்ருதாவுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மை தெரியவந்ததும், அதிர்ச்சியடைந்த அம்ருதா அவனிடமிருந்து விலகிச் சென்றுள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த தனுஷின் தம்பி சூர்யா, “என் அண்ணனின் காதலை நிராகரித்தவளை சும்மா விடமாட்டேன்” என்று கூறிக்கொண்டு, கடந்த ஜூலை 13-ஆம் தேதி மாலை அம்ருதாவின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளான். மேலும், அம்ருதாவின் முதுகு மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் சரமாரியாகக் குத்தி தனது கொடூர வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளான்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்கு துடித்த அம்ருதாவை, அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மூன்று நாட்களாக மரண படுக்கையில் போராடிய அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிரடி வேட்டையில் இறங்கிய ஜீவன் பீமா நகர் போலீசார், அண்ணன் – தம்பி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.













