Home மாவட்டங்கள் பெங்களூர் வீட்டுக்குள் கணவர் அத்து மீறிநுழைந்ததாக மனைவி வழக்கு

வீட்டுக்குள் கணவர் அத்து மீறிநுழைந்ததாக மனைவி வழக்கு

பெங்களூரு: ஜூலை 16-
லண்டனில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சொந்த வீட்டுக்கு வந்த கணவர் மீது, அத்துமீறி நுழைந்ததாக மனைவி தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பெங்களூரு குண்டலஹள்ளியைச் சேர்ந்த சத்யநாராயணா என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் அவர் நுழைந்ததாக, அவரது மனைவி சுமித்ரா மகதேவபுரா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் பதிவு செய்த 9-வது எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரி கணவர் சத்யநாராயணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாயித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா அமர்வு, “தன் சொந்த வீட்டிற்குள் சென்றதற்காக கணவர் மீது அத்துமீறல் வழக்கு தொடர முடியாது. வீட்டின் மீது கணவருக்கு முழு உரிமை உள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
விசாரணையின் போது கணவர் தரப்பு வழக்கறிஞர், “கணவர் இரவு பகலாக உழைத்து ₹2 கோடி மதிப்பில் வாங்கிய 3 பிஎச்கே வீடு இது. லண்டனில் இருந்து வந்த கணவர் மீது மனைவி இதுவரை 10 வழக்குகளைப் போட்டுள்ளார். இதனால் கணவரின் வாழ்க்கை ‘ஜட்கா வண்டி’ போல ஆகிவிட்டது” என்று வாதிட்டார். இதைக் கேட்டு புன்னகைத்த நீதிபதி, அப்படியென்றால் கணவர் வண்டிக்கு கீழே மாட்டிக் கொண்டாரா? என்று கேள்வி எழுப்பினார்.
உடனே வழக்கறிஞர் சினிமா பாடல் வரிகளை ஒப்பிட்டுப் பேச முயன்ற போது, குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்றத்தில் சினிமா பாட்டெல்லாம் பாட வேண்டாம் என்று கலகலப்பாகக் கூறினார்.
மேலும் கணவர் தரப்பில், “மனைவி சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி 10 வழக்குகள் தொடர்ந்துள்ளார். இதனால் கணவர் வேலைக்குக் கூட செல்ல முடியாமல் வாரம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு அலைந்து வருகிறார். 16 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் 14 வயதில் ஒரு மகன் உள்ளான். அவனையும் பார்க்க விடுவதில்லை” என்று கண்ணீர் மல்க வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.