
புதுடெல்லி, ஆக. 8- விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் மற்றும் காணொலிகள் தொடர்பாக பா.ஜ.க நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதியப்பட்டு, காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிகோரி மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று மஹுவா மொய்த்ரா தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதிகள், “நீங்கள்(மஹுவா) அரசியலுக்கு வந்துவிட்ட பின்னர் முட்டை வீசுவார்கள் என பயப்படுகிறீர்களா? மனுதாரரின் இந்த வாதத்தை ஏற்க முடியாது. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். ஆகஸ்ட் 14-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.














