
உடுப்பி: ஆக. 8-
காபு தாலுகா முதரங்கடி பகுதியில் நேற்று பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகர் டேவிட் டிசோசா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியை போலீசார் காலில் சுட்டு அதிரடியாக கைது செய்தனர்.உடுப்பி மாவட்டம் முதரங்கடி கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவரும், ஒப்பந்ததாரருமான காங்கிரஸ் பிரமுகர் டேவிட் டிசோசா நேற்று மதியம் முதரங்கடி சர்ச்சின் முன்பாக நின்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், டேவிட் டிசோசாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கூலிப்படை கொலையாளி ராஜு என்பவனை சில மணி நேரங்களிலேயே போலீசார் கைது செய்தனர். அவனை விசாரணைக்காக அழைத்து வந்தபோது, பைந்தூர் அருகே சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கூறி போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றான். உடனே காபு சப்-இன்ஸ்பெக்டர் தேஜஸ்வி தனது தற்காப்பிற்காக ராஜுவின் காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த ராஜுவை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த மோதலில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தேஜஸ்வியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.













