Home மாவட்டங்கள் பெங்களூர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி

லாரி மீது கார் மோதி 3 பேர் பலி

மூடிகெரே, ஆக. 8-
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கொட்டிகேஹாரா அருகே நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டர் லாரி மீது கார் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவைச் சேர்ந்த குருக்கிரண் (28), மோகன் (30) மற்றும் ஞானேஷ் (28) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பிரேம் குமார் மற்றும் ஹ்ரித்திக் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக ஹாசன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துமகூருவில் இருந்து தர்மஸ்தலாவுக்கு 5 பேரும் காரில் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். அப்போது கொட்டிகேஹாராவில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே வீதி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டர் லாரியின் பின்புறம் கார் அதிவேகமாக மோதியது.
மோதிய வேகத்தில் கார் உருக்குலைந்தது. நல்வாய்ப்பாக லாரியில் இருந்த சிலிண்டர்களில் கசிவு ஏற்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்த பனகல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.