
பெங்களூரு: ஜூன் 11–-
“ஒருவர் அரசு அதிகாரியாக இருக்கிறார் என்பதற்காக, அவருடைய தனிப்பட்ட சொத்து மற்றும் கடன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது” என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
அரசு ஊழியர் மீது எவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவருடைய தனிப்பட்ட விவரங்களை பொதுத் தகவலாக மாற்ற முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த எஸ். சாவித்ராம்மா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஒருவர் அரசு ஊழியராகி விட்டார் என்பதாலேயே, அவருடைய ஒவ்வொரு தனிப்பட்ட விவரமும் பொதுச் சொத்தாகி விடாது. வேலைக்காக, நாடாளுமன்றம் வழங்கியுள்ள தனிமனித ரகசிய காப்புரிமையை அவரிடமிருந்து பறிக்க முடியாது. மனுதாரருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும் இடையே இருப்பது தனிப்பட்ட நிலத் தகராறு.
வெறும் தனிப்பட்ட சட்டப் போராட்டத்திற்காகக் கேட்கப்படும் விவரங்கள், ‘பொது நலன்’ என்ற வரம்பிற்குள் வராது. குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட உடனே தனிப்பட்ட ஆவணங்களை வழங்க அனுமதித்தால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே சிதைந்துவிடும்.”
மேலும், ஊழலை வெளிப்படுத்தவோ அல்லது பொதுப் பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை நிரூபிக்கவோ வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே இத்தகைய விவரங்களை வெளியிட முடியும் என்றும், மனுதாரர் சிவில் அல்லது கிரிமினல் நீதிமன்றம் மூலம் தீர்வு தேடிக்கொள்ளலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார
கர்நாடகா அரசுப் போக்குவரத்து கழகத்தில் 1990 முதல் 2002 வரை துணை கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய எஸ்.பி. ஜெயபால் என்பவர், மனுதாரர் சாவித்ராம்மாவின் சொத்தை ஏமாற்றி விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், ஜெயபாலின் 1997 முதல் 2005 வரையிலான சொத்து மற்றும் கடன் விவரங்களை வழங்குமாறு தகவல் அதிகாரியிடம் சாவித்ராம்மா கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அதிகாரி, “சொத்து விவரங்கள் தனிப்பட்டவை, இதில் பொது நலன் ஏதும் இல்லை” எனக் கூறி தகவல் தர மறுத்துவிட்டார். இந்த முடிவை கர்நாடக தகவல் ஆணையமும் உறுதி செய்தது.
இதனை எதிர்த்து சாவித்ராம்மா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணையின் போது, “இந்தச் சொத்து விவரங்களை ஜெயபால் தனது வருமான வரித் தாக்கல் செய்யும்போது குறிப்பிடவில்லை, எனவே இதைத் தனிப்பட்ட விவரமாகக் கருதக் கூடாது” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும், இந்த வாதத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம், தகவல் ஆணையத்தின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, சாவித்ராம்மாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


















