சென்னை: பிப். 12 –
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிருபணமானவர்களை பணிநீக்கம் செய்வதற்கும் பள்ளிக்கல்வித் துறை முடிவு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. குறிப்பாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த விவகாரத்தில் சார்ந்த ஆசிரியர்கள் 3 பேரும்போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மூவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
இதேபோல், திருச்சி, ஈரோடு, ஒசூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான தகவல்கள் சமீபத்தில் வெளியானதால் விவகாரம் விஸ்வரூபமானது. மாணவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கக்கூடிய பள்ளிகளிலேயே அரங்கேறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தின. மேலும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது பணி நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
இதற்கிடையே பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் சார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இதையடுத்து மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும், அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டுமென துறை இயக்குநர்களுக்கு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள்கிடைத்துள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பள்ளி மாணவிகளுக்கு, கல்வியை கற்றுதரும் ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இத்தகைய போக்குகள் சரியானதல்ல. இதற்கு சரியான நடவடிக்கை எடுத்து இந்த நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு துறைரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.