
சென்னை: ஜூலை 24 –
ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை நாளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு எள் மற்றும் அரிசி மாவால் செய்யப்பட்ட பிண்டங்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பது, அவர்களின் ஆசிகளைப் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றின் கரையில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
வாழை இலைகளில் எள், அரிசி மாவுப் பிண்டம், வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி போன்றவற்றை வைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் முக்கிய பகுதியான குறுக்குத்துறை முருகன் கோவில், வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மன் கோவில், கொக்கிரகுளம், சீவலப்பேரி ஆறு, அருகன் குளம் தாமிரபரணி ஆறு உட்பட அனைத்து இடங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பெரும்பாலான பொதுமக்கள் குவிந்தனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அய்யங்குளம் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நந்தவனத்தில், ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கானோர் கூடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.