ஆர்சிபி வீரருக்கு தடை விதித்தது உ.பி. கிரிக்கெட் சங்கம்

லக்னோ, ஆகஸ்ட் 11- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், உத்தரப் பிரதேச டி20 லீக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் (UPCA) இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மாறாக அவர் பங்கேற்க இருக்கும் அணிக்கு அவரை அணியில் சேர்க்கக்கூடாது அழுத்தம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுக்கடுக்கான புகார்கள்.. சிக்கலில் யாஷ் தயாள் சமீபத்தில் 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி, அந்த அணி கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றியவர் யாஷ் தயாள். இந்நிலையில், அவர் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஜூன் மாதம், காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், யாஷ் தயாள் தன்னை ஐந்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகப் புகார் அளித்தார். இந்தப் புகார் உத்தரப் பிரதேச முதலமைச்சரின் குறைதீர்வு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரது கைதிற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், ஜெய்ப்பூரைச் சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை, யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவதாகக் கூறி, இரண்டு ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த வழக்குப் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால், யாஷ் தயாளுக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. உ.பி. டி20 லீக்கில் இருந்து நீக்கம் இந்த கடுமையான குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக, உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் (UPCA) யாஷ் தயாளை அடுத்து நடைபெற உள்ள உ.பி. டி20 லீக்கில் இருந்து தடை செய்துள்ளது. இந்தத் தொடரில் கோரக்பூர் லயன்ஸ் அணிக்காக 7 லட்சம் ரூபாய்க்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் மீதுள்ள வழக்குகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொடரில் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் அணி யாஷ் தயாளின் பெயர் தங்களது அணிப் பட்டியலில் இருந்தாலும், உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து இதுகுறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை என கோரக்பூர் லயன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்ததாக சில செய்திகள் கூறுகின்றன.