ஆறுகுட்டியில் ரூ.25 கோடியில் பூங்கா அமைக்கிறது தமிழக அரசு

சென்னை: டிசம்பர் 28 கேரள மாநிலம் ஆறுகுட்டியில், 25 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா., தீண்டாமையை எதிர்த்து, கேரள மாநிலம் வைக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன் நினைவாக வைக்கத்தில், 1994ம் ஆண்டு நினைவிடம் திறக்கப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து கிடந்த இந்த நினைவிடத்தை, தமிழக அரசு, 8.57 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து கட்டியுள்ளது. வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஈ.வெ.ரா., கைது செய்யப்பட்டு, ஆலப்புழாவில் உள்ள ஆறுகுட்டி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு நினைவிடத்திற்கு மாற்றாக, ஈ.வெ.ரா., பெயரில் பள்ளி கட்ட தமிழக அரசு முடிவெடுத்தது.
ஆனால், அங்கு அதிகளவில் பள்ளிகள் உள்ளதால், பூங்கா அமைக்க வேண்டும் என, கேரள அரசு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்று, 25 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்க, தமிழக அரசு தயாராகி வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீட்டை தயாரிக்கும் பணியில், தமிழக பொதுப்பணி துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சொந்த செலவில், நினைவிடம், பூங்கா என சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதில், தமிழக அரசு தாராளம் காட்டுவதால், கேரள அரசும், அதிகாரிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர்.