
சென்னை, நவ. 21-
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 5 வயதுக்குட்பட்ட 9.16 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. இந்தியா போலியோவை முற்றிலும் ஒழித்த நாடாக உள்ளது. அதேவேளையில், அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் காணப்படுகிறது. இதையடுத்து, இந்திய போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனைக் குழு, நாட்டின் 21 மாநிலங்களில் உள்ள 272 மாவட்டங்களை போலியோ பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் கண்டுள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மொத்தம் 6,647 மையங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஏற்கெனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் குழந்தைகளுக்கு மீண்டும் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, செங்கல்பட்டில் 2.70 லட்சம், தஞ்சாவூரில் 1.82 லட்சம், விருதுநகரில் 1.44 லட்சம், திருநெல்வேலியில் 1.32 லட்சம், சிவகங்கையில் 1.17 லட்சம், மயிலாடுதுறையில் 69,386 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். சுகாதார நிலையங்கள், பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, நடமாடும் முகாம்களும் செயல்படும். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், திருமண மண்டபங்கள், பயண வழி மையங்கள் ஆகிய இடங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படும்.













