
சிட்னி, டிச. 16- ‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என அந்நாட்டு பிரதமர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரிய வந்துள்ளது. பாண்டை கடற்கரையில் பயங்கரவாதி ஒருவர் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். மேலும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்தை பாராட்ட வைத்துள்ளது. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது, 40, என தெரியவந்துள்ளது.

















