
கான்பெர்ரா: டிசம்பர் 10-
16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதித்தது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.
பேஸ்புக், இன்ஸ்டராகிராம், யுடியூப், டிக்டாக்’ போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்களால் சிறுவர் – சிறுமியர் சீரழியும் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று டிச., 10ம் தேதி முதல் இந்த தடை முழுவீச்சில் அமலாகவுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடைவிதித்த, உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறி உள்ளது. இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மன அமைதியை உருவாக்கும். இது அவர்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. .இது ஒரு பெரிய மாற்றம். இது உண்மையில் முக்கியமானது. இன்றைய மாற்றம் உங்கள் குழந்தைகளை சமூக வலைதளத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆஸ்திரேலிய குடும்பங்கள் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதற்கான உரிமையையும், பெற்றோர்கள் அதிக மன அமைதியைப் பெறுவதையும் வலியுறுத்தும் நாள் இது. இன்றைய நாள் பெருமை வாய்ந்தது. இவ்வாறு அந்தோணி அல்பானீஸ் கூறினார்.




















