
பெங்களூரு: மே 25-
மருத்துவமனை கழிவறையிலேயே கர்ப்பிணி பெண் ஒருவரின் அந்தரங்கத்தை மொபைல் போனில் படம் பிடித்த அதிர்ச்சி அசிங்கம் பெங்களூரு சர்ஜாபுரா மெயின் ரோட்டில் அரங்கேறியுள்ளது. இந்த வக்கிரம் பிடித்த காமுகனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 21-ஆம் தேதி, சர்ஜாபுரா மெயின் ரோட்டில் உள்ள பிரபல அப்போலோ பெல்லெசன் சாம்பியன் மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அவர் அங்கிருந்த கழிவறைக்குச் சென்றபோது, வெளியில் பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவன், ஜன்னல் இடுக்கு வழியாகத் தனது மொபைல் போனை நுழைத்து அந்தப் பெண்ணை ரகசியமாகப் படம் பிடித்துள்ளான்.
விஷயத்தை உடனே சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண், அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுதாரித்துக் கொண்ட மருத்துவமனை ஊழியர்கள், தப்பியோட முயன்ற அந்த நபரை மடக்கிப் பிடித்து அவனது மொபைல் போனைப் பறிமுதல் செய்து சோதித்தனர். அப்போது அங்கிருந்தவர்களை தூக்கி வாரிப்போடும் ஒரு அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.
அவன் தனது போனில் தனியாக ஒரு ‘ஃபோல்டர்’ உருவாக்கி, அதற்கு ரகசிய ‘லாக்’ போட்டு வைத்திருந்தான். அதைத் திறந்து பார்த்தபோது, இந்த கர்ப்பிணி பெண் மட்டுமல்லாமல், அந்த மருத்துவமனைக்கு வந்த இன்னும் பல பெண்களின் அந்தரங்கப் படங்களும், வீடியோக்களும் அதில் கொட்டிக் கிடந்தன. இந்தச் சம்பவத்தால் அந்த கர்ப்பிணி பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பெண்களின் அந்தரங்கத்தோடு விளையாடிய அந்த வக்கிர புத்தி கொண்ட காமுகன் ‘கிருஷ்ண பராகி’ என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக பெங்களூரு வர்த்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வக்கிர புத்தி கொண்ட கிருஷ்ண பராகி மீது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கும், பெண்களுக்கும் முறையான பாதுகாப்பு வழங்கத் தவறிய பெல்லெசன் சாம்பியன் மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய வர்த்தூர் போலீஸார், காமுகன் கிருஷ்ண பராகியைக் கைது செய்து அவனது மொபைல் போனைப் பறிமுதல் செய்தனர். அவன் இதுவரை எத்தனை பெண்களை இவ்வாறு ரகசியமாகப் படம் பிடித்துள்ளான், அந்த வீடியோக்களை வேறு எங்காவது இணையத்தில் பகிர்ந்துள்ளானா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


















